27-Jun-2011

27.06.2011


இன்றைக்கு முப்பது வயது முடிந்து முப்பதொன்றில் அடியெடுத்து வைக்கிறேன் . முப்பது வயதின் பிறந்த நாளன்று இருந்த விட்டேத்தியான மனநிலைக்கும் , இன்றைய மகிழ்ச்சிக்குமான கால இடைவெளி வெறும் பனிரெண்டு மாதங்கள் என்பதை நம்ப முடியவில்லை. வாழ்வின் எல்லா கணங்களிலும் திட்டமிட்டு நகர்த்தும் ஆட்களின் நடுவில் நாளைக்கு நாம் கல்யாணம் பண்றோம் , நீ இப்போவே கிளம்பி வா என்கிற ஒருவனை நம்பி வந்தவளின் நம்பிக்கையை நான் பூர்த்தி செய்திருப்பதாகவே மகிழ்ந்து போகிறேன்.

வாழ்வின் எல்லா நிலைகளுக்குள்ளும் சுழன்று ,உருண்டு புரண்டு , இது என் தடம் என்பதை அறியவே 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. காலத்தின் எல்லா நகர்வுகளிலும் வந்த சில நண்பர்கள் இன்னமும் தோள் தந்து வருவது மட்டுமே பெரும் நிம்மதியைத் தருகிறது. சூழலின் நச்சுக்கணங்களை நானும் தோற்றுவித்துக்கொண்டாலும் தம் நேசக்கரங்களால காத்து , இது உன் வழியல்ல , நீ நல்ல ஆடும் இல்லை என்ற/ என்கிற மேய்ப்பனாய் நேசத்தின் வாதையத் தருகிறவர்கள் துணையிருக்கிறார்கள் இன்னமும்.

திருமணம் என்னை பக்குவப்படுத்தியிருக்கிறது . 12 ஆண்டுகளாய் தெரிந்த தோழியே மனைவியாய் வந்ததில் நான் பக்குவப்பட்டிருக்கிறேனோ, நேசம் என்பதன் ஏக்கம் இப்போது முழுதாயில்லை. நேசக்கப்படுவதைக் காட்டிலும் ஆனந்தம் வாழ்வில் வேறென்னவாய் இருக்க முடியும். நள்ளிரவு 12 மணிக்கு தூங்கிறவனை எழுப்பி , ஒற்றை மெழுகின் மொத்த பிரகாசம் பிரதிபலிக்கிற காதலின் கண்களோடு ஹாப்பி பர்த் டேடா புருசா என்கிற வார்த்தைகளின் நேசம் எத்தனை பலமாயிருக்கிறது. நேற்றைய கழிந்த வாழ்வு ஞாபகத்தில் அடுக்குகளிலிருந்து என்னைக்கேலியாய் பார்க்கிறது. உன்னைத்தாங்கிக்கொள்ள வரப்போகிறவளுக்கு பின்னால் என் இடம் எத்தகையது என்பதை நீ எதிர்கொள்வாய் என்ற கோபக்கார தோழியின் ஆங்கார முகம் மனதை பிசைகிறது. 

வாழ்வென்பது வெறும் காட்டாறுதான் , இருந்தாலும் சேர்கிற இடம் பொறுத்து அதன் இயக்கம் மாறுமென்கிறதை புரியவே இத்தனை ஆண்டுகள். நானென்பது நாமாகி , நாங்களாகி விடுகிற தருணத்தின் பொழுதுகள் மிக அற்புதமானவை. ஒரு நாளில் எல்லாம் நிகழும் என்பதை விட ஒவ்வொரு நாளிலும் எதுவும் நிகழலாம் என்பதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.

இதுவரைக்குமான வாழ்வில் திருமணம் ஒரு பெரிய எல்லைக்கல்லாய் நிற்கிறது. மனைவியின் கரம் பற்றிய நம்பிக்கைத் தருணங்கள் வாழ்வை , மனதை எளிமையாக்கி நகர்த்திச் செல்கிறது. நான் மிக மகிழ்வோடு இருக்கிறேன், நான் மிகுந்த ஏகாந்த மனநிலையிலிருக்கிறேன், நான் மிக விளையாட்டுக்காரனாய் இருக்கிறேன். எல்லாவற்றையும் பார்த்துக்கொள்கிற / புரிந்து கொள்கிற மனைவியிடம் எப்போதும்,எல்லாவற்றையும் சொல்ல முடிகிறது விளக்கங்கள் இல்லாமலேயே.

எது எப்படியிருப்பினும், என்னை என் எல்லாக்குறைகளுடனும் நானாகவே ஏற்றுக்கொண்ட நண்பர்கள், என் தொல்லைகளை சகித்துக்கொண்ட நட்புகள், என்னை நோக்கிய எல்லா பிரச்சனைகளிலும் பங்கெடுத்துக்கொண்டவர்கள் என்கிற என் எல்லா நட்புகளுக்கும் நன்றி கூறுவதைத் தவிர வேறென்ன செய்யப்போகிறேன். சென்னைக்கு வருகையில் சரக்கு வாங்கித்தருவதை தவிர்த்து..,

பிறந்த நாளை நிறைய ஆண்டுகள் யோசித்ததேயில்லை, இதை சரியாக நினைவில் வைத்திருந்ததும் இல்லை.  ஆனால் 2007 ஆம் ஆண்டிலிருந்து தொடங்கிய என் பிறந்த நாளுக்கான நினைவூட்டல்கள், வாழ்த்துகள், மின்னஞ்சல்கள், செல்பேசி குறுஞ்செய்திகள் என்கிற இப்போது சிறிது சலிப்பையே ஏற்படுத்துகிறது. 

அற்பமான வாழ்வின் கணங்களைப்பற்றிய எதிர்பார்ப்பை, நம்பிக்கையை எப்போதும் சொல்லிக்கொண்டிருக்கிறவளை நினைத்துக்கொள்கிறேன் வழக்கம் போலவே . ஒற்றை ம்ம் குரலில் புறாவின் படபடப்பாய் கோபத்தில் பாய்வதை சிரித்தபடியே நகர்த்துகிறேன். நேசமென்பதே நேசிக்கப்படுவதில்தான் புரிகிறது. எல்லா நேசத்திற்குமான நன்றியாய் இந்நாளை உபயோகித்துக்கொள்கிறேன்.

நன்றி நட்புகளே.,



10 சொல்லிட்டுப்போனவங்க:

  1. வாழ்த்துக்கள் சகா!!

    ReplyDelete
  2. வாழ்த்துகள் தெய்வ அங்கிள் ஃபாதர் கென்! ;))

    வயசான இப்படி எல்லாம் ஃபீல் ஆகும், ஜஸ்ட் என்சாய் தி பர்த்டே வித் பர்த்டே ஸ்பெசல் சம்பர்!

    :))

    ReplyDelete
  3. நன்றி கறுவல் சகா

    நன்றி டைனோ ஜி :)

    வயசாகிட்ட பீலும் இருக்கு :)) நன்றி

    ReplyDelete
  4. வாழ்க வளமுடன்.

    இப்படிக்கு,
    பிறந்தநாளுக்கு பிறந்தநாள் மட்டும் பின்னூட்டம் போடும்,
    எம்.எம்.அப்துல்லா.

    ReplyDelete
  5. வாழ்க வளமுடன்.

    இப்படிக்கு,
    பிறந்தநாளுக்கு பிறந்தநாள் மட்டும் பின்னூட்டம் போடும்,

    கும்க்கி...

    நன்றி: குழந்தை கவிஞ்ஞர்.

    ReplyDelete
  6. நன்றி பாளை கிங்க்

    நன்றி அப்துல்லா அண்ணே

    நன்றி கும்க்கி

    ReplyDelete