12-Apr-2011

பிரிவின் தொலைவு



பிரிவென்பது வெறும் தொலைவென்பதாய் நீ தீர்மானித்திருக்கிறாய். தொலைவை தூரமென்பதாகவும் யோசித்து வைத்திருக்கிறாய். அருகருகே அமர்ந்தும் தொலைவாயிருக்கிற ஆட்களைப்பற்றி உனக்கு எப்போதும் தெரியப்போவதில்லை. நீ அழைக்கிற குரலுக்கு ம்ம் சொல்கிற ஒற்றை வார்த்தைக்குள்ளான தொலைவு உனக்கு புரியப்போவதுமில்லை.

ஒளியாண்டுகளில் பயணிக்கிற தூரம் இருந்தாலும் நினைவின் முதல் நேனோ நொடியில் வந்து விழுகிற உன் முகத்தை என்ன செய்வது? தொலைவை எப்படி கணக்கிடலாம். வந்தடைகிற வேகத்தின் மூலம் கணக்கிடலாமா? மணிக்கு இத்தனை என்றெல்லாம் கணக்கிட எந்த அவசியமும் இல்லாத எனக்கு, நீ எப்படி தொலைவில் இருப்பதாய் நம்ம முடியும். நம்ப வேண்டியதன் அவசியம் என்ன?

என் மேன்மையை உயர்த்தி , உன் கிருபையினாலே என்னைப்பெருக செய்தவள் நீ. நீ மட்டுமே எனக்கான வானின் ஒளி நட்சத்திரம். திசைக்காட்டிய , காட்டுகிற விண்ணகத்து மீன். உன் ஒளிக்கண்களும் , ஒற்றை வார்த்தைகளும் எனக்கான பயணத்தில் எப்போதும் உடனிருக்கின்றன.

ஆனாலும் நீ சொல்கிறாய், உனக்கும், எனக்குமான தூரம் மிகவும் அதிகமென்று. நம்புவது உன் இயல்பு என்றாலும் , இம்முறை உன் முரட்டு பிடிவாதத்தால் அப்படி இருப்பதாக என்னையும் நம்ப சொல்கிறாய். நேற்று விடியற்காலை 4.28 மணிக்கு எழுந்தவுடன் , உன் சாய்ந்த முகமும், இதழ் கடைவாயின் ஒளிந்த சிரிப்புமாய் என் முன்னே, நீ நின்றாய். நிஜம் நீதான் நின்றாய். எத்தனை சண்டைகள் நிகழ்கைகளின் முடிவிலும் நீ மட்டுமே என்னைக்காதலிப்பதான வழக்கமான குற்றச்சாட்டை முன் வைப்பாய். யோசித்து பாரேன், என்றைக்கேனும் நான் , உன்னைக் காதலிப்பதாய் வார்த்தைகளில் சொல்லியிருக்கிறேனா என்று. வெறுப்பதாய் மட்டுமே எப்போதும் சொல்வேன். உன்னைக்கொல்வதன் மூலம் மட்டுமே நிம்மதியடைவேனென்றும் சொல்வேன். எதையும் அதன் எதிர் துருவ முனையில் நின்று ஊசாலாடி கிடப்பதையே தொடர்ச்சியாய் நிகழ்த்துகிறவன் நான் என்பாய். இதை மட்டும் எப்படி மறந்தாய்.

பாலையினுள்ளான கடும் கோடையில், எரிக்கும் சூரியனும், தூசுகளடங்கிய மணல் சுனாமியுமாய் வாழ்வும் ,மனமும் சில கணங்களில் பெரும் துன்பம் தருவதுண்டு. ஒற்றைப்பார்வையினால் மொத்த வாழ்வும் இப்படித்தான் என்பதும் , அதையே தொடர்ச்சியாய் முன்வைப்பதும் என்ன விதமான நியாயம்.

நான் ஏன் இதையெல்லாம் எழுதிக்கொண்டிருக்கிறேன் என்றே எனக்குத் தெரியவில்லை. நேற்றைய முத்தம், அதன் ஈரம் காய்ந்த உடன் மறந்திட வேண்டும் என்பது உன் எண்ணம். முத்தமிட நெகிழ்ந்த தருணத்தையும் மனதையும், எப்போதும் உயிர்ப்போடு ஞாபகத்தில் வைத்திருக்கவேண்டுமென்பது என் பார்வை.

இதன் தொடர்ச்சியாய் என்ன சொல்வாய் ஐ ஹேட் யூ என்பதைத் தவிர்த்து?

என்னவாயினும் பறவைகள் விதைப்பதுமில்லை . சேகரிப்பதுமில்லை என்கிற உன் கர்த்தனின் வசனத்தில் பறவைகள் உண்பதில்லை, உணவைத்தேடுவதில்லை என்று எங்கேயும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று தேடிப்பாரேன். நேசமும் அதன் நெருஞ்சியும் சேர்ந்திருப்பதுதான் வாழ்வு. எதை நேசமாகவும் எதை நசிப்பாகவும் எடுத்துக்கொள்வது என்பதில்தான் இருக்கிறது கொண்டாட்டத்திற்கான சூத்திரம்.

நீ என்பது ஒரு
இசை,
நடனம்,
ஒரு கொண்டாட்டம்
மற்றும் ஒரு
பிரசவம்
உயிர்ப்பித்தலோ, உயிர்த்தெழுதலோ தன்னுள்ளே தானே இருக்கிறது. நேசமும் அதன் நிறமும் என்றும் இழக்காத இந்த மனமிருக்கின்ற வகையில் வாழ்வின் எல்லா கணங்களிலும் ,எல்லா பொழுதுகளிலும், நீ என்னோடே இருப்பாய்! ஏனெனில் நீ என் நேசத்தின் கடவுள். ஆமென்.

1 சொல்லிட்டுப்போனவங்க: