வயலின் நெல் சாயங்கால சூரியனின் நெருப்பு வண்ணத்தில் பழுத்துக்கிடந்தது. அப்பா யோசனையாய் நடு வயலில் இறங்கிப்பார்த்தவர், என்ன சொல்ற அறுப்பு விட்டுடலாமா, எலி வெட்ட ஆரம்பிச்சிடுச்சு என்றார். அம்மா வரப்பின் பில்லை அறுத்துக்கொண்டிருந்தவள், இன்னும் 8 நாளிருக்கே, ஆனாலும் கதிர் கனம் தாங்காம தலை சாஞ்சிக்கெடக்கு அறுப்பு நாளைக்கே விட்டுடலாம். களத்துக்கு மட்டும் தலயாரிக்கு சொல்லிடு என்றாள்.
காவேரியின் கிளையாறான வீரசோழனின் பாய்ச்சல் கரையில் நிலம் கிடந்தாலும் , ஆத்துப்பாசனத்தில் அறுவடை செய்ததெல்லாம் முப்பாட்டன் காலத்திலேயே முடிந்து போன பின் ஆழ்துளை கிணற்றின் அடி ஈரத்தின் உறிதலில் தான் நிலம் ஈரம் பார்த்துக்கிடந்தது. பெரும் நிலப்பண்ணையின் ஓரமாய் கிழிந்த தாளின் ஒட்டாய்க் கிடந்த நாலங்குல சொந்த நிலம். பண்ணையில் நீர்ப்பாய்ச்சின நாள் போக பத்து மணிக்கரண்ட் இருக்கிற ஒவ்வொரு நாளில் கெஞ்சிக்கூத்தாடி விவசாயம் பண்ணுகிற நிலம்.
இந்த எரநூறு குழி நெலத்தை வச்சு என்னத்துக்குடா மாரடிக்கிறே என்கிட்டேயே கொடுத்திடு நான் களமாக்கிக்கிறேன்னு அடிக்கடி முதலாளி கேட்டாலும் அப்பாவுக்கு அது சொந்த நிலம் , தம் உடம்போட ஒரு பாகம் மாதிரி . கனவுல கூட வயல்ல ஏதாவது வேலைதான் செஞ்சிட்டு இருப்பாரோன்னு இருக்கும் எனக்கு.
பத்து வயதில் தத்தாய் கொடுக்கப்பட்டவர், திருவாரூரின் கடைக்கோடி கிராமத்தில் இருந்து பிரஞ்சின் ஆளுகைக்கு உட்பட்டுருந்த திருநள்ளாற்றுக்கு அழைத்து செல்லப்பட்டவர். போட்ட சோத்துக்கு பொதி மாடா சொந்தக்காரங்க ஆக்கினாலும் உழைப்புக்கு அஞ்சாமல் மம்முட்டியும் அருவாளுமாய் அலைந்து திரிந்து வேலை செய்தவர். பசி நேரத்துக்கு சோறு கிடைக்காது, பசிக்குதுன்னு கேக்க முடியாது எல்லாத்தையும் வேலைல மறக்கனும் , ஒத்தையாய் வயல்ல அண்டைப்போடனும் , நாத்துப்பறிக்கனும் காலையில குனிஞ்சா சாயந்திரம் வரைக்கும் கரையேற முடியாது. வயக்காரனும் காரியக்காரனும் கண்கொத்திப் பாம்பா கரையிலேயே நிப்பானுங்க.
அதெல்லாம் அந்தக்காலம் இப்போல்லாம் எவன் நேரத்துக்கு வாங்குற கூலிக்கு வேலை செய்றான் என்பார் அடிக்கடி.
வயலின் எலி வெட்டிய பகுதிகளை பார்த்த படி கரையேறி வந்தவர் அறப்புக்கு சொல்லிடலாம் என்றார் .
வயலின் பொன்னி நெல் கொஞ்சம் வீட்டுக்கும் மற்றது வாங்கின வட்டிக்கும் கடனுக்குமாய் போக சரியாயிருக்கும் எப்போதும். அரப்புக்கு ஆட்கள் சொல்ல போனார் அப்பா. சிறிது நேரத்தில் பரபரப்பாய் திரும்பி வந்தார். அறப்புக்கு யாரும் வர மாட்டாங்களாம், பண்ணை நெலத்துல கூலி கூட்டித்தரலைன்னு சொல்லிட்டதால சங்கத்தில முடிவெடுத்திட்டாங்களாம் என்றார்.
அம்மாதான் சொன்னாள், நாமளே அறுத்திடலாம் , சின்ன சின்னக் கட்டாய் கட்டி களத்தில அடிச்சிக்கலாம் என்றாள்.
இரண்டாம் நாளின் வெளுப்புக்கு முன் அம்மாவும் அப்பாவும் அறப்பறுவாலால் அறுக்கத்துவங்க , நானும் என் தங்கச்சியும் பிள்ளறுவாலால் கைக்குப் பிடித்ததை அறுப்பதாய் பேர் பண்ணிக்கொண்டிருந்தோம்.
பத்து மணிக்கெல்லாம் தெரு ஆட்கள் கரை மேலிருந்து பாத்தபடி குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டிருந்தார்கள். ரெண்டு நாளிலும் அப்படியே நடந்துக்கொண்டிருந்தார்கள். புருசனும் பொண்டாட்டியுமா அறுத்திட்டீங்க என்றபடி தலையாரியும் போனார். கட்டாய் கட்டி களத்தில் கொண்டு சேர்த்த மூணாவது நாள் , நெல்லடிக்க மாட்டுக்கு சொல்லப்போனார் அப்பா.
நெல் கட்டையெல்லாம் பிரித்து அம்மாவும் நானும் பரப்பிக்கொண்டிருந்தோம். தெரு முனையில் கூட்டமாய் ஆட்கள் வருவது தெரிந்தது. வந்தவர்கள் சங்கத்தில அறுக்கவே கூடாதுன்னு ஊர்க்கட்டு போட்டிருக்கோம் அதை மீறி ஏன் அறுத்தீங்க என்று காட்டுக்கத்தலாய் கத்திக்கொண்டிருந்தார்கள். தூரத்தில் இருந்து பார்த்த அப்பாவும் ஓடி வந்தார். ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டு அவரை அடிக்க பாய்ந்தார்கள்.
எப்போது யார் கொளுத்தினா என்றே தெரியாமல் கொழுந்து விட்டு எரியத்துவங்கியது நெல்கட்டுகளும் , களத்தில் பரப்பிக்கிடந்தவைகளும். காய்ந்த நெல்லுக்கும் அதுக்கும் அரை மணி நேரத்தில் ஏகத்துக்குமாய் எரிந்து போனது. களத்தில் கிடந்த மரப்பரையும் , மம்முட்டியின் காம்பும் கருக்கிடந்தன. ஆங்காரமாய் தரையில் அழுதுக்கிடந்த அம்மா மண்ணை வாரி தூத்தியபடி அப்பாவை நோக்கி ஓடினாள்.
எதுவும் சொல்லாமல் அடிப்பட்ட முகத்தை , துண்டால் துடைத்தபடி புள்ளைங்கள வீட்டுக்குக்கூப்பிட்டு போ நான் வரேன் என்றார். அம்மாவோ பிடிவாதமா அவரைப்பிடித்து இழுத்த படி வீட்டுக்குக்கூட்டி வந்தாள்.
எதுவும் சொல்லாமல் அப்படியே வீட்டு சுவத்தில் சாய்ந்து உட்கார்ந்திருந்தார். எந்த பேச்சும் இல்லாமல் எதுவும் சொல்லாமல் இருந்தவரை அம்மாதான் யே என்ன போச்சுன்னு இப்படி உக்கார்ந்திருக்கே, கையில இருக்கிற சாமானை அடகு வச்சு வட்டியைக்கட்டிடலாம். சாப்பாட்டுக்கு ஒரு மாசம் வெளில அரப்புக்குப் போ நானும் நெல் பொறுக்க போறேன். ரெண்டு புள்ளையும் வெக்கிச்சுப்போய் நிக்குது நான் சோறாக்குறேன் நீ கடையில அரிசி வாங்கிட்டு வா என்றாள்.
அரிசியை வாங்கிக்கொடுத்து விட்டு அப்பா சொன்னார், உழைப்போட ருசி என்னன்னு தெரிஞ்சவன் எவனாச்சும் சாப்பாட்ல நெருப்பு வெப்பானாடி, நம்ம வேர்வைல வெளஞ்ச நெல்லு அரிசியாகி எத்தன பேரு பசியைப்போக்கும் எத்தன பேரு பஞ்சத்த தீர்க்கும். ஒன்னுத்துக்குமில்லாம நெருப்புக்கு தின்னக்கொடுத்திட்டாங்களேன்னு முகத்திலடிச்சபடி வீட்டு வாசல விழுந்து அழுதார்.
அதுக்கு அப்பறம் எங்க அப்பா எதுக்குமே அழுது நான் பார்த்ததில்லை . நெலத்தை வித்து பத்து வருசத்துக்கு மேல ஆகுது.

அப்பாவுக்கு அது சொந்த நிலம் , தம் உடம்போட ஒரு பாகம் மாதிரி . கனவுல கூட வயல்ல ஏதாவது வேலைதான் செஞ்சிட்டு இருப்பாரோன்னு இருக்கும் எனக்கு.
ReplyDeleteஇந்த வரிகள் அருமை.
தஞ்சை, விவசாய உணர்வு (that feel) கதையில் சிறப்பாக வந்துள்ளது.
அம்மாதான் யே என்ன போச்சுன்னு இப்படி உக்கார்ந்திருக்கே, கையில இருக்கிற சாமானை அடகு வச்சு வட்டியைக்கட்டிடலாம். சாப்பாட்டுக்கு ஒரு மாசம் வெளில அரப்புக்குப் போ நானும் நெல் பொறுக்க போறேன். ரெண்டு புள்ளையும் வெக்கிச்சுப்போய் நிக்குது நான் சோறாக்குறேன் நீ கடையில அரிசி வாங்கிட்டு வா என்றாள்.
ReplyDeleteகீழத் தஞ்சை மாவட்ட செயலாளர் மா மீ (மா மீனாக்ஷி சுந்தரம்), பேச்சை கேட்டது போன்ற உணர்வு
அண்ணே எம்ப்ளாக்கையெல்லாமா படிக்கிறீங்க, ரொம்ப நன்றி உங்க பின்னூட்டத்துக்கு நான் கீழத்தஞ்சை ஊர்க்காரந்தான்:)
ReplyDeleteகென்,
ReplyDeleteஉன்னுடைய சிறப்பான கதைகளில் இது வர இயலாது. இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்.
சொல்ல வந்த கருத்து இன்னும் கனன்றுகொண்டிருக்கிறது. குட்.
நல்லாயிருக்குங்க கென் அப்டின்னுதான் சொல்லத்தோணுது, ஆனா நெல்லுக்கு நெருப்பு வைக்கிறதுங்கறது கொஞ்சம் அதிகமாப்படுது.
ReplyDeleteநன்றி சுபைர் பாலாசி :)
ReplyDeleteகொளுத்தின நெருப்பு கனன்றுகொண்டிருக்கிறது நெஞ்சில்....
ReplyDeleteநன்றி ராஜேஸ்வரி
ReplyDeletehttp://blogintamil.blogspot.com/2011/06/blog-post_23.html
ReplyDeleteதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். கருத்துரைகளை அறியப்படுத்தவும். நன்றி.
இன்றுதான் முதன் முதலில் உங்கள் பதிவை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் பதிவின் நடை அருமை..மன உணர்வுகளை தொடுகிறது.பகிர்தலுக்கு நன்றி.
where is followers button?its not displayed.
http://zenguna.blogspot.com