உங்களில் யாருக்கேனும் ஜீப்புடன் எரித்துக்கொல்லப்பட்ட சாமியாரையும் அவரது குழந்தைகள் பற்றியும் தெரியுமா? அட அதாங்க மதம் மாற்றினாங்க எரிச்சுக்கொன்னுட்டாங்கன்னு தானிக்கும் தீனிக்கும் சரியாப்போச்சுன்னு நீதியரசர்கள் கூட்டமா சேர்ந்து சொல்லிட்டாங்களே அதுக்கும் இதுக்கும் என்னன்னு கேட்கிறீங்களா சொல்றேன் இருங்க.
ஆந்திராவின் விசாகப்பட்டினம் பகுதியில் ஒரிசா சட்டீஸ்கர் எல்லைகள் மலைப்பகுதிகளாய் நீண்டு கிடக்கிறது. விசாகப்பட்டினத்திலிருந்து ஒரு ஆறு மணி நேர பயணத்தில் வரும் கடைசி பெரிய ஊரான போப்லி வரைக்கும் பேருந்திலும் அதன் பின்னர் நம்மூர் ஷேர் ஆட்டோக்களின் பயணத்தை நினைவுப்படுத்தும் .அதனைவிடவும் சாகச ஜீப்பிலோ ஆந்திராவின் எப்போதேனும் வரும் அரசின் கூண்டுப்பேருந்திலோ ஆடு, கோழிகளுடன் போய்ச் சேர்ந்தால் மலை அடிவாரத்தின் ஆந்திர கடைக்கோடி கிராமம் வரும். அங்கு காலையிலேயே போய்ச்சேர்ந்திட்டீர்கள் என்றால் பயணத்தைத் தொடர்வது உசிதம் இல்லாவிட்டால், அடர்காட்டுப்பகுதிக்கான ஒற்றையடிப்பாதையில் வெளிச்சமில்லாமலும் காட்டு விலங்களின் பயமுறுத்தல்களுடனோ அதிலும் பெரும்பாலும் குரங்குகள் , காட்டுப்பன்றிகள் இல்லாவிட்டால் காட்டு நாய்கள் . இப்போது புதிதாய் மாவோயிஸ்ட்களைத் தேடியலையும் மத்திய சிறப்புப்படையின் கண்களில் பட்டால் நேராக கடவுளின் கரங்களையடைய நேரிடும் என்பதால் விடியற்காலையில் மலையிறங்கி வரும் பழங்குடிகளுக்காய் காத்துக்கிடந்து , ஐந்து ரூபாய் தாள்களாய் 5 அல்லது 10 ரூபாய் தாள்களாய் 5 நன்றாய் கவனித்துக்கொள்ளுங்கள் ஒற்றை ஐம்பது ரூபாயோ ஒற்றை நூறு ரூபாயோ அல்லது தனித்தனி தாள்களாய் வைத்திருந்தால் உங்களை அழைத்து செல்வார்கள்.
இந்தப்பகுதியில் 600 கிமீட்டர் நீளத்திற்கு கிடக்கும் மலைப்பகுதி ஆந்திரா ஒரிஸ்ஸா , ஜார்கண்ட் அதைத்தாண்டிய மாநிலங்கள் வரைக்கும் நீண்டு கிடக்கிறது.
ஆந்திரத்தின் எல்லைக்குள் ஒரிசாவின் எல்லை விழுந்தடித்துக்கிடக்கும் பகுதி செழுமையான வனம். அருவிகளும் காட்டாறுகளுமாய் பசுந்த பகுதி. இங்கிருக்கும் இனக்குழுக்களில் இரண்டு இனக்குழுக்கள் பெரியவை. இவர்கள் பெரும்பாலும் ஒரிசாவின் பகுதியிலிருந்து நாடோடிகளாய் வந்தாலும் ஆந்திரத்தின் எல்லைக்குள் வசிப்பதால் ஆந்திரர்களாய் கருதப்படுகிறார்கள். ஆனால் தெலுங்கு பேச வராது. இவர்களின் மொழிக்கு எழுத்துகள் கிடையாது. நம்மூரின் குறவர்களின் மொழியை ஒத்த ஒலியுடனான மொழி இது. தரையிறங்கிப்போகும் ஆண்களுக்கு மட்டும் தெலுங்கின் அடிப்படை வார்த்தைகள் தெரியும். பெரும்பாலும் பண்ட மாற்றாய்த்தான் அரிசியையோ மற்றதையோ வாங்கி வருவார்கள்.
பெரிய இரு இனக்குழுக்களில் மூன்றாவது மலையை ஒட்டிய அருவியின் கரையோரம் வாழும் மக்கள் விவசாயம் செய்கிறவர்கள். பெரும்பாலும் வாழை பயிரிடுவார்கள். மாமரங்களும் , புளிய மரங்களும் நிறைந்த இவர்களின் பகுதி எப்போதும் கூத்தும் கும்மாளமுமாய் இருக்கும். இவர்கள் தேன் எடுப்பதையும் , நம்மூரின் கேழ்வரகை ஒத்த ஒன்றை உணவுக்காய் பயிரிட்டுக்கொள்வார்கள். இவர்களின் இனத்தில் பெண் தான் அதிகாரம் மிக்கவள். ஆண்களுக்கு என்று எந்த சொத்திலும் பங்கு கிடையாது. மனைவி எப்போது வேண்டுமானாலும் ஆணை குடும்பத்தை விட்டு போக சொல்லி விடலாம். அப்படி துரத்தப்படுகிற ஆண் வேறு குடும்பத்தினருடன் அவர்களின் வயல் வேலைக்கோ அல்லது பொதுவான வேலைக்காரனாகவோ கருதப்பட்டு வேலையின் அளவைப்பொறுத்து உபயோகிக்கப்படுவான். மனைவியினால் துரத்தப்படுவது என்பது ஆணை ஒரு அடிமை நிலைக்கு அனுப்பப்படுகிற தண்டனையை போன்றது.
பெண்கள் அரையில் ஒரு கைலியையோ அதன் துண்டையோ அணிந்திருப்பார்கள். முலைகளில் பெரும்பாலும் மணிகளும் திருமணம் ஆகிய புது மாதம் என்றால் கணவனின் கைலியிலோ துண்டிலோ கிழித்த ஒன்றினால் மூடப்பட்டிருக்கும்.
இவர்கள் பெரும்பாலும் அமைதியை விரும்புகிற கூட்டமாய் மட்டுமே வாழ்கிற மக்கள். காட்டு மூங்கில்களை வெட்டியெடுத்து கிட்டத்தட்ட 40 கிமீட்டர்க்கு மேலாய் தலை சுமையாய் சுமந்து வெறும் 10 ரூபாய்கோ ஒரு தம்ளர் அரிசிக்கோ விற்று வருகிறவர்கள். வீடுகள் பெரும்பாலும் மூங்கில் மரங்களாலான சிறு குடிசைகள். பெரும்பாலும் வெட்ட வெளியில் படுத்து உறங்கிறவர்கள். மலைக்குகைகள் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வரிசைக்கிரமமாய் இருக்கும். மாம்பழங்களையோ, புளியையோ சீசனில் கிடைப்பதை சேர்த்து வைத்திருக்கிற கோடவுன்களைப்போன்றது குகைகள். எதற்கும் கணக்கோ சாவியோ கிடையாது.
அடர் காடு என்பதால் விஷக்காய்ச்சலும் , மலேரியாவும், போலியோ அட்டாக்குகளும் மிக அதிகம். நாங்கள் உலக வங்கியின் ஆதரவுடன் எய்ட்ஸ் தடுப்பு மற்றும் பொது நலம் என்கிற கொடியின் அடியில் சேவை செய்வதாய் போனவர்கள். எங்களின் 2 ஆண்டுகளின் ஆய்வில் அங்கு ஒருவர்க்குக்கூட எய்ட்ஸ் இல்லாதது பெருத்த ஏமாற்றத்தையே கொடுத்தது. நாகரீகமில்லாத காட்டுமிராண்டிகள் எய்ட்ஸ் இல்லாமல் இருப்பதை எங்களின் சூப்பிரிடெண்ட் ஏற்றுக்கொள்வதாயில்லை. ஆனாலும் மலேரியாவில் தொடர்ந்து மரணங்கள் நிகழ்ந்ததால் பொதுநலம் என்கிறதன் கீழான நிதியைத் தொடர்ந்து பெற்று வந்தோம்.
பெரும்பாலான அடிவாரத்து ஆட்களுக்கு வேலையே மலை வாழ் மக்களிடம் பொருட்களைப்பெற்று கொண்டு அஞ்சும் பத்துமாய் பணம் கொடுத்து ஏமாற்றுவதுதான் . நான்கு வாழைத்தார்கள் சுமந்து சென்று கொடுத்து விட்டு ஒரு டம்ளர் அரிசியும் ஒரு கோழியும் வாங்கிக்கொண்டு வருவார்கள். மூங்கில் 10க்கும் மேலாய் சுமந்து சென்று கொடுத்து விட்டு 20 ரூபாய் பெற்றார்கள் என்றால் பெரிய விசயம்.
மூங்கிலை வாங்கி கூடை முடைந்து அதை பெரும் விலைக்கு விற்பதையும் அதையே இவர்கள் வாங்கிக்கொண்டு வருவதையும் பார்த்து , மலை மக்களுக்கே கூடை முடையக் கற்றுக்கொடுக்க நினைத்தோம். எனவே எங்களின் டீமிலிருந்து மூன்று பேர் , கூடை முடைகிறவர்களிடம் ட்ரெய்னியாக போய்ச்சேர்ந்தோம்.
மூங்கிலில் கூடு மூங்கில் வகையில் தான் கூடைகள் முடைய முடியும் என்கிற தகவலையும் அதை அரைகுறையாய் ஊற வைத்து அதாவது தண்ணீரில் மூழ்கியும் மூழ்காமலும் இருக்கிற வகையில் அரை நாளைக்கு ஊற வைத்து முதலில் நான்கு பகுதிகளாவும் பின் ஒவ்வொரு துண்டையும் எத்தனை சிறு பகுதியாக கத்தியால் பிரித்திட முடியுமோ அத்துணைப்பகுதியாக பிரித்திட வேண்டும்.
கூடையின் அடிப்பகுதிக்காய் மட்டும் எட்டு அல்லது பத்து அடிப்பாக பட்டையான மூங்கில் தேவை. அதன் இடை இடையே சிறு மூங்கிலின் நார்ப்போன்ற பகுதியால் கோர்த்து கோர்த்து முடிகிற இடத்தில் அதை உள்புறமாக மடக்கி விட்டு விட வேண்டும். இது சாதாரண நைலான் கூடை முடைகிற மாதிரிதான் என்பதால் எளிதில் கற்றுத்தேர்ந்தோம்.
இப்போது மலையேறி அவர்களுக்கு கற்றுக்கொடுப்பது என தீர்மானிக்கப்பட்டதும் எவரேனும் இருவர் மலை மீதே தங்கியிருந்து கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது சூப்ரிடெண்டின் கட்டளையாய் வந்தது.
எனக்கு அவர்களின் மொழியில் அரைகுறையாய் சில வார்த்தைகள் தெரியுமென்பதாலும் கூடை முடைவதில் நான் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டதாலும் என்னையும் என்னுடன் தங்குவதற்கு ஜூனியராய் வந்து சேர்ந்த ஷோபியையும் அனுப்பி வைத்தார்கள்.
நாங்கள் தங்குவதற்காய் அவர்களின் குடியிருப்பின் கடைசியில் உள்ள சிறுக்குன்றின் சமதளத்தில் கட்டப்பட்ட குடிசை வீட்டை ஒதுக்கித் தந்தார்கள். காட்டருவியின் முனையிலிருந்து மூங்கில்களை இணைத்து நீர் வர செய்தார்கள். நீரானது பாறையில் விழுந்து தெறித்து சிறு நதியாக விரல்களாய் ஓடிக்கொண்டிருந்தது.
நாங்கள் சிறு பெண்களாய் ஐந்து பேரை தேர்ந்தெடுத்து கூடை முடைவதை கற்றுக்கொடுக்க துவங்கினோம். அதனோடு எங்களின் ப்ரேயர்களின் போதும் அவர்கள் இருக்கிற வகையில் பார்த்துக்கொண்டோம்.
மூன்றாம் வாரம் முடிகையில் இரண்டு பேர் கூடை முடையத்துவங்கினார்கள் . இப்போது எங்கள் சூப்ரிடெண்ட் மற்ற இனக்குழுப்பகுதிக்கு போக சொன்னார்.
இவர்கள் மொத்தமாய் வேறுபட்டவர்கள். பெண்கள் மட்டுமே உழைக்கக்கூடியவர்கள். ஆண்களுக்கு பணிகளோ கடமையோ கிடையாது . மொத்தமாய் கூட்டமாய் போய் மற்ற ஆட்களின் மாடுகளைத் திருடி வருவதும் அதை தீர்க்கும் மட்டும் தின்று குடித்து சண்டையிட்டுக்கொள்வதுமாய் இருப்பவர்கள். பெண்கள் வழக்கம்போல காட்டுத்தேன் சேகரிப்பதும், மூங்கில் வெட்டி விற்று பணம் பெறுவதுமாய் இருந்தார்கள். இவர்களின் பகுதியில் அடிக்கடி மாட்டுக்கறி கிடைப்பதால் காட்டு விலங்குகளின் நடமாட்டமும் அதிகம் . எவரேனும் காட்டு விலங்குகளிடம் சிக்கி உயிரழப்பும் , உடல் சேதாரமோ நிகழ்ந்த வண்ணமிருந்தது.
புதிய நிதி இந்த இனக்குழு மக்கள் பகுதிக்காய் குடிநீர்த் தொட்டி அமைத்து நீர் வினியோகம் செய்வதற்காய் வந்திருந்தது. தரைப்பகுதியிலிருந்து மலைக்கு கொண்டு சேர்த்த பைப்புகள் மற்ற தளவாட பொருட்கள் ஊரின் நடுவிலிருக்கும் சமதள பகுதியில் வைத்திருந்தோம். இரு வார கடும் உழைப்பில் அடிவார ஆட்களுடன் மலைவாழ் பெண்களும் இணைந்து நீர்த்தேக்க தொட்டிக்கான அடித்தள பகுதியை உண்டாக்கியிருந்தார்கள். கூலியா அரிசியும் ரொட்டிகளையுமே வாங்கிக்கொண்டார்கள்.
நாங்கள் மூன்று வாரக்கால ஆளுமைப் பயிற்சிக்காய் ஹைட்ராபாத் சென்று விட்டு திரும்புகையில் இரு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்திருந்தன. நீர்த்தேக்க தொட்டி கட்டிய பகுதியில் பல்வேறு காவிக்கொடிகள் தென்பட்டன. நிறைய வெளியாட்களும் தென்பட்டார்கள்.
வழக்கம் போல எங்களின் சூப்ரிடெண்ட் மற்ற பகுதிக்கு மட்டும் செல்லுமாறு அறிவுறுத்தினார். நாங்கள் எங்களின் சர்ச்சை அங்கே கட்டத்துவங்கினோம். 36 பேர்கள் கிறிஸ்துவர்களாய் மதம் மாறியிருந்தார்கள். இப்போது முன்பை விட அடிக்கடை மாடுகள் களவாடப்பட்டன. சிற்சில குடிசைகள் தீவைத்துக்கொளுத்தப்பட்டன. முதல் முதலாய் வோட்டு போடும் வாய்ப்பும் மலைவாழ் மக்களுக்கு கிடைத்திருந்ததும் அங்கேயே வோட்டுக்கான பூத் அமைக்கப்பட்டிருந்ததும் வெளியாட்களின் நடமாட்டத்தை அதிகரிக்க நிறைய வழி செய்தது.
ஆறு மாதங்களுக்குப்பின் இதே இனக்குழுக்களைப்போன்ற மலைப்பகுதி மக்களிடையே சேவையும் மதமாற்றமும் செய்து வந்த சாமியாரும் அவரது குழந்தைகளும் எரித்துக்கொல்லப்பட்டதை அறிந்து எங்களை அந்த பகுதிக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டோம்.
எரிக்கப்பட்ட குடிசைகள், அடித்து நொறுக்கப்பட்ட எளிய மக்கள், பெண்கள். பீதியும் வன்முறையும் நிறைந்த குழந்தைகள் என்ற கலவர சூழலில் நாங்கள் மருத்துவ உதவிகளையும் ப்ரேயரையும் தொடர்ந்து நிகழ்த்த துவங்கினோம்.அயல்நாட்டு நிதியின் அளவு இப்போது முழுக்க நின்று போயிருந்தது. போலியோவும் , புது வியாதிகளின் இழப்பை பற்றிய எங்களது அறிவிக்கைகள் ஹைட்ராபாத்திலேயே கிடந்து வீணாய்ப்போயின.
சிலுவையில் அறையப்பட்டு உயிர்த்துறந்த கர்த்தரும் , தீமைகளை அழித்து நன்மைகளை பெருக்க வந்த கடவுளும் ஒன்றாய் மலை மக்களை விட்டுப்போனார்கள்.
கந்த்மாலின் எல்லா காட்டு கிராமங்களிலும் காவிக்கொடியும் கர்த்தரும் போட்டிப் போட்டுக்கொண்டு ஒருவரை ஒருவர் மன்னித்து ஓடிப்போனார்கள்.

என்ன சொல்லறதுன்னு தெரியலை...
ReplyDeleteபுனைவால குடை பின்னியிருக்கீங்க..
கூடைன்னும் போட்டுக்கலாம்
ReplyDelete(எப்டி சமாளிச்சன் பாருங்க ;)
http://powrnamy.blogspot.com
ReplyDelete