மூணாவது படிக்கும்போது ஒருத்தனை சிலேட்டால நெத்திப்பொட்டுக்கிட்ட வெட்டியிருக்கேன், நாலாவது பெயிலானதை கிண்டல் பண்ணிய ஒருத்தனை தார்ரோட்டில் தள்ளி காலைப்பிடிச்சு இழுத்திருக்கேன். ஆறாவதுல வாத்தியார் டிவிஎஸ் 50 பஞ்சராக்கியிருக்கேன். எட்டாவதுல போடான்னு சொன்ன ஒரு பொண்ணு கன்னத்தில அறைஞ்சிருக்கேன். பத்தாவதுல லவ் லெட்டர்ல என் ஹேண்ட் ரைட்டிங்க்ன்னு மாட்டி விட்டவளை சைக்கிளோட உதைச்சு தள்ளியிருக்கேன். சாப்பிட்ட தட்டோட எத்தனை தடவைன்னு சொல்ல முடியாத அளவுக்கு தரையில அடிச்சிருக்கேன், ஒரு தடவை அம்மா முகத்தில பட்டு வெட்டுக்காயமாவும் ஆகியிருக்கு. இந்த சோத்துக்கு நீ பிச்சை எடுப்பேடான்னு ஆங்காரமா அவ சாபமிடுறப்போ அவ சாப்பாட்டுத் தட்டையும் தரையில விசிறி அடிச்சியிருக்கேன்.
நான் எப்படி இருந்தேன் ஏன் இருந்தேன்னு எப்போவும் யோசிச்சதேயில்லை. வாழ்க்கைன்னா என்னன்னும் எப்படி வாழனும்னும் கனவு லட்சியம்னு எதுவுமே இல்லை எப்போதும். காலேஜ்ல அவனவன் பி ஈ படிக்கிறதை லட்சியமா வச்சிருந்தப்போ எனக்கு சாராயம் வித்து பெரிய பணக்காரனா ஆகிடனும்னு மனசுக்குள்ள இருந்திச்சு. பி ஈ சீட் கிடைச்சப்போ பீஸ் கட்ட முடியாதுன்னு வீட்ல தொரத்தி விட்டப்போ சென்னை பாரீஸ் கார்னர்ல இருந்து வேலப்பன் சாவடி வரைக்கும் பசி மயக்கத்தில நடந்துப்போனப்போவும் என்ன செய்ய போறோம்னு எந்த பிளானும் இல்லை. சீனியர்ங்க கூட டேட்டா எண்ட்ரி வேலை டைப் ரைட்டிங் தெரியாம ஆரம்பிச்சப்போவும் , தட்டுத் தடுமாறி எழுத்தைத் தேடி டைப் பண்ணும் போதும் என்னமோ தோணும் ஏண்டா இவ்ளோ தத்தியா இருக்கோம்னு.., டூ வீலர் லைசென்ஸ் வண்டின்னு நைட்லபோய் டேட்டா எண்ட்ரிக்கு சிடி வாங்கிட்டு வர வேலை எப்படியோ கை மாறி எனக்கு வந்திச்சு. அண்ணாநகர் மேற்குல இருந்து கோபாலபுரம் வரைக்கும் நைட்ல மரண வேகத்தில வண்டியோட்டிறது த்ரிலிங்கா இருந்திச்சு. போலீஸ் பேட்ரோல்கிட்ட தினம் மாட்டுவேன் கம்பெனி ஐடி கையில இருக்கிற பேக்ல இருக்கிற சிடிஸ்ன்னு என்னை ஒரு திருட்டி சிடி விக்கிறவனா ட்ரீட் பண்ணுவாங்க. சில நேரம் விடவே மாட்டாங்க. விதம் விதமா குடிச்சிட்டு வண்டியோட்ற பெரிய இடத்து பொம்பளைங்க பொண்ணுங்கன்னு வேடிக்கைப்பார்த்திட்டு இருப்பேன்.
போனா போகுதுன்னு தொரத்தி அனுப்புவாங்க, திரும்பவும் மரணக்கிணற்றுல வண்டியோட்ற சுகம் கிடைக்கும். எத்தனையோ நைட் வள்ளுவர் கோட்டம் வாசல்ல 2 மணிக்கு வந்து உட்கார்ந்திருந்திருந்திருக்கேன். சோகையான லைட் வெளிச்சத்தில அவ்வப்போது போற ஆட்டோ தவிர ரோடே செத்துக்கிடக்கிற உணர்வுதான் வரும். ஒரு ராட்சச மலைப்பாம்பு மாதிரி பகல்ல இருக்கிற ரோடு. , ராத்திரில செத்து மிதக்கிற பாம்பாகிடும்.
வாழ்க்கையோட எல்லா தருணங்களிலுமே எம்மேல யாரோ ஒருத்தர் ப்ரியமா இருந்திருக்காங்க. எனக்கு யோசிக்கவோ நன்றி சொல்லவோ புரிஞ்சிக்கவோ முடியாம இருந்திருக்கு. அப்பா பி ஈ படிக்க காசு கொடுத்திருந்தா நான் எங்காவது வேலை கிடைக்காம அலைஞ்சிட்டு இருந்திருப்பேன். சம்பந்தமில்லாம அழுது பட்டினி கிடந்து சத்தியம் வாங்கிட்டு போனவ வராமயிருந்தா இன்னும் குடிச்சிட்டு தகராறு பண்ணிட்டு நடு ரோட்லேயே கிடந்திருப்பேன். இந்த வேலை உனக்கானது இல்லைன்னு சொல்லவும் ஒருத்தி தேவையா இருந்திச்ச்சு. இது போதும்னு செட்டில் ஆக நீ யாருடான்னு கேட்கவும்., இதுக்கு மேல இன்னும் மேலன்னு ஓடின ஓட்டம் எல்லா ப்ரியத்துக்கும் பின்னாடி யாரோ ஒருத்தர் இருந்திருக்காங்க இருக்காங்க.
குடிச்சிட்டு முகம் தெரியாதவனையெல்லாம் கட்டிப்பிடிச்சிட்டு அழற ஒரு குடிகாரனோட ஏகாந்த மனநிலை இப்போ இருக்கு. மனசை உடைச்சி குமிழாக்கிட்ட மனநிலை , வாழ்க்கையில எளிய மனுசங்களோட அன்பைத்தான் தேடியலையிறோம். விதம் விதமான பேர்ல உறவுக்குள்ள தேடுறது வெறும் ப்ரியத்தைதான். எங்க போனாலும் எதுக்குள்ள புகுந்தாலும் கைக்குள்ள படற நீரோட ஈரம் காஞ்சிட்டாலும் உணர்த்துற குளிர்மை மாதிரிதான் அன்பும் , கையில இருந்து கவிழ்ந்த நீர் நதியோடது. நாமதான் நதியை பெருசா கற்பனைபண்ணிட்டு தேடுறோம், மணல் நடுவிலேயும் ஈரம் கசியிறதுக்கு பேரும் நதிதான்.

//எல்லா ப்ரியத்துக்கும் பின்னாடி யாரோ ஒருத்தர் இருந்திருக்காங்க இருக்காங்க.
ReplyDelete//
ஓடிக்கிட்டே இருக்கறது நம்ம பொழப்பு ! தொரத்திக்கிட்டு & ஓட வுட்டுக்கிட்டே வர்றதுக்கு எப்பவுமே இருப்பாங்க பாஸ் :))
kalkattu pottum adangala.
ReplyDeletepiriyam venumamam piriyam. yaravathu ...........
irrukkum idathai vittu
illatha idam thedi
yengarasa poreenga?
pesi vegu nalachi. oru phone podunganne.
//மணல் நடுவிலேயும் ஈரம் கசியிறதுக்கு பேரும் நதிதான்.//
ReplyDeleteஉண்மையில் படித்தவுடன் மனம் கசிந்தது.
நன்றி ஆயில்யன், ஹரி , கிராமத்தான் :)
ReplyDelete