நான் யார் என்பதை , நீங்கள் தீர்மானிக்கத் தேவையில்லை. நான்,நானாகவே இருக்கிறேன் - நம்பிக்கையுடன்..,
02-Oct-2010
கண்ணி
வயல்களுக்கு நடுவில் தண்ணிப்பாய்வதற்கான சிறு வாய்க்கால்களுக்கு கண்ணி என்று பெயர். ஆற்று நீர்ப்பாசனக்காலத்தில் அங்கிருந்து பெரும் வாய்க்கால்களின் வழி வரும் நீர் , வயலின் தலையிலிருந்து வயல்களின் நீளத்திற்கு ஏற்ப கடைசி வரைக்கும் போகும் அந்த வாய்க்காலிலிருந்து ஒவ்வொரு வயலுக்கோ அல்லது இரண்டு வயலுக்கு ஒன்றாகவோ இருப்பதை கண்ணி என்றே நாகை கடைமடைப் பகுதியில் அழைப்பார்கள்.
ஆற்று நீர் காவேரியின் வெள்ளம் பொறுத்தோ மழைப் பொறுத்தோதான் வாய்க்கால்களில் பெருக்கெடுக்கும். அதுவும் பெரும் பண்ணையார்கள் தங்கள் வயல்களுக்கான நீருக்காய் வாய்க்கால்களை தடுத்து அணைப்போட்டு காவலுக்கும் ஆள் வைத்திருப்பார்கள். இந்த அணைகளில் கருவை முட்களையும் சப்பாத்திக்கள்ளியையும் போட்டு வைத்திருப்பார்கள், யாரும் கையாலோ மோட்டை எதுவும் இடாமல் தடுக்கும் பொருட்டு.
நள்ளிரவின் கீறல் நிலா வெளிச்சத்தில் அப்பாவுடன் மடைத்திறக்க போகையில் நான் பயப்படாமல் இருக்க எதாவது கதை சொல்வார். பெரும்பாலான வாய்க்கால் ஓரங்கள் நாணல் காடு மண்டி பாம்பு புத்துகளுடனும் நுணா மரங்களுடனும் இருக்கும். அங்காங்கே எலந்தை மரங்கள் இருட்டில் குகைப் பூதமாய்த் தெரியும்.
ஒற்றை மண்வெட்டியும் , தாத்தாவின் வீச்சரிவாளும் வைத்திருப்போம். அப்பா கடும் உழைப்பாளி , இரவு முழுக்கவும் மடை வெட்டி வாய்க்கால் உடைத்து தண்ணீர்க் கொண்டு வராமல் விட மாட்டார். எனக்கோ எங்கிருந்தாலும் உடனே உறங்கி விடுகிற மனநிலையில் கண்ணை மூடிக்கொண்டு நடப்பேன் அவர்க்கூடவே.
ஒவ்வொரு மடைக்கும் ஒவ்வொரு விதமாய் நீரை வெளி வரச்செய்வார். காவலிருப்பவர்களிடம் நயந்துப்பேசியும் , சண்டையிட்டும் மடை திறக்க செய்வார்.
வயலின் கண்ணிகள் எப்போதும் மிகச்சுத்தமாய் வைத்திருப்பார். ஒரு புல்லையோ நண்டு வளைகளையோ காண முடியாது. தினமும் ஒரு புறத்தில் எதையாவது சரி செய்துக்கொண்டிருப்பார். வயல் தலைமாட்டில் நீர் புகுந்தால் வெகு சீக்கிரம் கண்ணிகள் வழியாய் வயலுக்கு நீர்ப்புகவும் வெள்ளக்காலங்களில் வடிகாலுக்கு என தனியாகவும் கண்ணிகள் வைத்திருப்பார். வயதான விவசாயிகள் எப்போதும் ஒரு வயலோட வெளைச்சல் அதோட நீர்ப்பாய்ச்சல்ல இருக்கும்டா, ஒப்பனோட கைப்பக்குவம் இங்க நிறைய பேருக்கு இல்லடா என்பார்கள்.
இனிமேல் அப்பாவிடம் சொல்ல முடியாது அவரை எனக்கும் பிடிக்குமென்று , சொன்னாலும் நம்ப மாட்டார். கண்ணிகள் மண்மூடி புல் வளர்ந்து தூர்ந்துப் போய்விட்டன.
வகைகள்
அனுபவம்
Subscribe to:
Post Comments (Atom)

வாய்க்காலுக்கு நடுவே அணை = கவணை
ReplyDeleteநண்டு வளை இல்ல வேற ஏதாவது ஓட்டை வழியா தண்ணி ஒடுனுசுன்னா. "மோட்டை வச்சு போயிடுச்சுன்னு சொல்லுவாங்க
சப் வாய்க்கால் = கண்ணி
வயலுக்குள்ளையே பிரிஞ்சு பிரிஞ்சு தண்ணி பாயரதுக்காக இருக்கறது " காணு "
வயல் ஓரங்களை கழிச்சு வெட்டி அணைக்கிறதுக்கு . அண்டை போடுறதுன்னு சொல்லுவாங்க
நானும் காவிரியோட கடை மடை விவசாய பூமியிலேர்ந்து வந்தவன் தான் "கென் "
இன்னமும் கிராமம் ன்ன உடனே மதுரை மாவட்டத்துக்கே அது சொந்தம்னுரா மாதிரி மாதிரி கண்பிக்குறாங்க .
"மூட்டைய" குடிச்சுட்டு மம்புட்டி தூக்கிட்டு போறவன பத்தியும் எழுதனும் கென்
நன்றி
பாலா
நன்றி பாலா
ReplyDeleteகவணை ஆமாம் மடை இல்லாட்டி கவணைன்னு சொல்வாங்க
அண்டைப்போடுறது ம்ம் நிறைய ஞாபகங்களை கிளறி விட்டாச்சு நன்றி
குடும்பஸ்த்தனாய் போனதும் குடும்ப தலைவனிடம் இயல்பாய் தோன்றும் ப்ரியம் ..நீங்கள் சொல்லிக் கொண்டு இருக்க வேண்டாம் .அவருக்கு தெரிந்திருக்கும் கென் .தந்தையாய் ஆனவுடன் இன்னும் பெருகப் போகிற பிரியத்தை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்?
ReplyDeleteகண்ணி பூச்சரத்தில் கட்டிய இரண்டு பூக்களுக்கு நடுவே உள்ள தூரம் கூட கண்ணியோ? ரெண்டு விரக்கடை என்பதை ரெண்டு கண்ணியாவது பூ வைத்து கொள் என்பார்கள் ..
தூர்ந்த நிலத்திலும் பயிர் செய்யலாம் .green revolution
@பாலா
நானும் கிராமம் தான் பாலா :))
குடும்பஸ்தன் :) நன்றி பத்மா
ReplyDeleteஎதை எதையோ ஞாபகப்படுத்துடீங்க கென்.
ReplyDeleteபாசன மடைக்கி கீழ கிடக்கிற வாய்க்கா தண்ணில ஜட்டியோட குதிச்சி
சீவின மூணு முளைகுச்சை குறுக்க இறக்கி
அதோட பலத்துல இரண்டு நாட்டு பலகைய
ஒன்னு மேல ஒன்ன குத்த நிப்பாட்டி
கைக்கு கிடைச்ச கோரை, சொனைபுல்லு, மண்ணாங்கட்டி , களிமன்னுனு எல்லாம் சேர்த்து வரிச்சி போட்ட கவனைல
அந்தாண்ட போக முடியாத வாய்க்கா தண்ணி
பாசன மடை வழியா புகுந்து வடிகா வரப்பு பக்கமா எல்லா நாத்துக் காலையும் நனைச்ச படி கொஞ்சம் கொஞ்சம் ஒரு கவிதை மாதிரி படர்ந்து போறதை
பார்த்துகிட்டு இருக்கும் போதே
வேர்வை உதட்ல வழிஞ்சி உப்பு கரிக்கும் பாருங்க
அட அட அட ...அந்த சுவைக்கு ஈடா இந்த உலகத்துல எழுத்தை தவிர நிச்சயமா வேற எதுவுமே இல்லைன்னு தோணும் கென்.
அப்படி சொட்டு தண்ணி தாண்டாம போட்ட கவனை முளைகுச்சை
பிடுங்க வந்த தலையாரியோட ஆன கை கலப்பெல்லாம் ஞாபகம் வருது கென்.
ஆனா இந்த பதிவில் நீங்க என்னை ஏமாத்திடீங்க கென்.
முழங்கால் வரைக்கும் சேறு உள்ள வரிகளா
ரசிச்சி ரசிச்சி பேசுவீங்கன்னு எதிர் பார்த்தேன்.
ஆனா நீங்க மேலோட்டமா பேசிட்டீங்க.
என்றாலும் சொல்ல வந்த வயலும், வலியும் தெளிவா இருக்கு கென்.
ரொம்ப பேசிட்டேன் போல..
திட்டாதீங்க கென்.
நன்றி கமலேஷ் சேறும் சகதியுமான வாழ்க்கையை எழுதனும்
ReplyDeleteநல்லா கிளறிட்டீங்க கிராமத்து மண்ணை எழுத்தோடு..அருமை..
ReplyDelete