07-Jul-2010

பிறழ்வின் கண்



இலேசான காய்ச்சல், எரிச்சல் மண்டிய பசி, ஏதேனும் உண்ணலாம் என்கிற மனநிலைக்கு வெறும் வெந்நீர் குடித்தால் போதுமென்றும் தோன்றியது. பசித்த நகர ஓட்டமாய் ஓடிய வாகனங்கள் தெருவின் ஓரம் உயிரற்ற உடலாய் கிடக்கின்றன. கிழித்தக் கோட்டில் பிரிந்துக்கிடக்கும் சாலைகளில் மனித நடமாட்டமின்றி , அவ்வப்பொது ஒளிமிகுந்த ஓரிரு கார்கள் போய்க்கொண்டிருக்கின்றன. கார்களின் மேலும் , இடையிலும் ஏறி நிற்கும் பூனைகளின் கண்கள் பளிங்காய் மின்னி மறைகின்றன. இரு புற வானுயர்ந்த கட்டிடங்களின் நடுவில் , சாலையில் ஒரு எறும்பென ஊர்ந்துப்போவது அதுவும் குறையாத வெப்பத்தில், காய்ச்சலின் சூட்டில் நடப்பது மிக ஆயாசத்தையே தருகிறது. நடுவில் கண்ட பூனையின் கண்கள் என்னை என்னுள் ஊடுருவிப் பாயும் கணையாய் ஒளிர்ந்து மறைகிறது.

மனம் ஒரு நகர்வு நதியிலையாய் , மூழ்கியும் சுழலில் சிக்குண்டும், தடுப்புகளில் சிக்கியும் , அமிழ்ந்தும் நகர்ந்தபடியிருக்கிறது. நகர்வது இலையல்ல நதிதான் என்றாலும் தானே நகர்வதான இறுமாப்புகளில் மூழ்கி களிக்கிறதோ. தொடர்பற்ற எண்ணங்களை சிதைத்தபடி காய்ச்சலின் இயலாமை உடலை தளர்ச்சிக்குள்ளாக்கியது. எதுவரையில் நடக்க இயலும் ஏதேனும் பக்கத்தில் உள்ள உணவகமாய் பார்க்கலாம் என்றபடி தேடத்துவங்கினேன்.

கிண்டிப்பாலத்திலிருந்து அடையாறு வரைக்குமான தூரத்தை நள்ளிரவின் உறக்கம் தொலைத்த நேரத்தில் நடந்து கடந்த நாட்களின் கடந்தக்காலத்தை நினைத்துக்கொள்கிறேன்.

இந்நள்ளிரவின் பாலையின் இரவின் வீதியில் பூனைகள் குறுக்கும் நெடுக்குமாய் ஓடிக்கொண்டிருக்கின்றன. குடல் பிதுங்கி சாலையோடு ஒட்டிக்கிடந்த ஒரு பூனையை நினைத்துக்கொள்கிறேன். நகுலனுக்குப் பூனைப்பிடிக்குமாம். சாருவுக்கு நாய்கள் பிடிக்கும். உனக்கு என்கையில் உன்னை என்றவளை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். யாருக்கு உன்னப்பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் எனக்கு உன்னைப்பிடிக்கும் , உன்னை மட்டும்தான் பிடிக்கும் என்கிறவளை என்னச்செய்வது என்று யோசித்தபடி சிரித்துக்கொள்கிறேன்.

காலம் ஒரு மழைக்கால சாயங்கால வானவில்லாய் விசித்திர வண்ணங்களை வீசியெறிந்து மின்னி மறைகிறது. தூறலுக்கிடையில் உன் விரல் பற்றி  நடக்கையில் , குளிரும் என் உடலுக்காய் உன் ஷாலை எடுத்துப்போட்டாய். நானென்ன பொம்பளையாடி , இதைப்போடுறே என்கையில், என் கொழந்தைக்குளிர்ல நடுங்கிட்டு வரப்போ, நான் என்ன பண்றது. போட்டுக்கோ குட்டி, அடுத்த ஸ்டாப்பில நாம ஸ்வெட்டர் வாங்கிக்கலாம் என்றவள், வாங்கிய இரு ஸ்வெட்டரை அங்கேயே ஒன்றை என்னைப்போடச்செய்ததை நினைத்து சிரித்துக்கொள்கிறேன். ஏதேதே பேசியபடி , குளிரும் சாறலுமான பூங்காவின் பூமரத்தோர இருக்கையில் ஆளுக்கொரு பக்கமாய் அமர்ந்திருந்ததை நினைத்துக்கொண்டேன். நான் கிளம்புறேண்டி என்கையில் , இருடா என்றபடி தான் அணிந்திருந்த ஸ்வெட்டரை கழற்றிக்கொடுத்தாள். ஏண்டி அதான் நான் போட்டுருக்கேன்ல அப்பறமென்ன என்கையில், லூசு என் வாசம் உன் உடம்போட இருக்கட்டும் , குளிரெல்லாம் போயிடும் கழட்டு , சீக்கிரம்டா என்றவளை , வாங்கிக்கொடுத்த திமிர்ல போடுன்னு சொன்ன, இப்போ கழட்ட சொல்ற என்றபடி வீசியெறிந்ததை, கண்கள் தளும்ப ஓடி எடுத்தவள், உனக்கு எப்போவுமே என்னை காதலிக்க வராதுடா என்றாள் .

நள்ளிரவிலும் வெப்பம் குறையாத இங்கு இன்னுமொரு அரை மணி நேர நடையில் தொப்பலாய் வேர்த்தால் காய்ச்சல் குறையலாம் என்று தோன்ற, சாப்பிடும் எண்ணத்தைக்கைவிட்டு நடக்கத்துவங்கினேன். சென்னையிலிருந்து கிளம்புகையில் ஸ்வெட்டரை பெட்டியில் வைக்க இடமில்லாமல் எடுத்து தனியாய் வைத்தது மனதுக்குள் குடையத்துவங்கியது. நீல நிற கோடுகளுடன் , அவளின் வாசம் சுமந்த ஸ்வெட்டர், ஒரு நொடியில் ஓடிப்போய் எடுத்துப் போட்டுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தை தள்ளிப்போட முடியாமல், தானாகவே அறை நோக்கி பிறழ்வின் கணங்கள் தொடரலாம்..,

9 சொல்லிட்டுப்போனவங்க:

  1. வாழ்த்துகள் கென்!

    அன்பின் ராஜன் ராதாமணாளன்!

    ReplyDelete
  2. ப‌ழயன கழிதலும் புதியன புகுதலும்னு முன்னோர்கள் சொல்லி வைச்சுட்டு போயிருந்தாலும், பழசை மறைக்கனும்னு நினைக்கிறப்பதான், நிகழ்ந்த நினைவுகள் சில‌ புதுசாக நம் ஞாபகத்தில் வந்து தொலைக்கும். புனைவு நல்லாயிருந்தது கென்!

    ReplyDelete
  3. நன்றி ராஜன், மோகன்

    ReplyDelete
  4. //மனம் ஒரு நகர்வு நதியிலையாய் , மூழ்கியும் சுழலில் சிக்குண்டும், தடுப்புகளில் சிக்கியும் , அமிழ்ந்தும் நகர்ந்தபடியிருக்கிறது. நகர்வது இலையல்ல நதிதான் என்றாலும் தானே நகர்வதான இறுமாப்புகளில் மூழ்கி களிக்கிறதோ//


    அழகா இருக்குது! தனிமை பயமுறுத்தும் வேளைகளில், ஏனோ அடிக்கடி வந்து பயமுறுத்தும் எண்ணங்கள் இலையாக கிடந்து அங்குமிங்கும் அல்லாடிக்கொண்டிருப்பதை விட நதியாகி போய் சேர்ந்துவிடலாமோ என...!

    காலம் வெகு விரைவாக ஓடிக்கொண்டிருப்பது கனவற்ற நிஜமாகவும் உறைக்கிறது!

    ReplyDelete
  5. பை தி பை பக்கத்தில இருக்கிற ஹோட்டலுக்கு போய் சாப்பிட்டு வாங்கன்னு சொன்னா அம்புட்டு தூரம் போய்ட்டு அபபடியே ஒரு யூ டர்ன் போட்டு வந்திருக்கீங்களா? ரைட்டு!

    ReplyDelete
  6. நன்றி ஆயில்ஸ், ஹம் ஆனா வீட்டுக்கு வந்து வெந்நீர் குடிச்சேன் :)

    ReplyDelete
  7. நடக்கிற ரோடும், இருக்கிற ஸ்வேட்டரும், கசிகிற நினைவும் - ரொம்ப அருமையா இருக்கு - புனைவு

    ReplyDelete
  8. நன்றி கமலேஷ்

    ReplyDelete
  9. see my blog http://thandapayal.blogspot.com/

    if u like it get its template code here https://docs.google.com/document/edit?id=1MhobBFrAyBTaM2aFh0RKvrx7YX0r9qlvPaYCf2x0gfo&hl=en#

    create an archive page using

    http://jacqsbloggertips.blogspot.com/2010/05/create-table-of-contents-or-archives.html

    ReplyDelete