26-Apr-2010

உறக்கமற்ற இரவுகள்

உறக்கம் வராத இரவுகள் அச்சமூட்டுபவையாக இருக்கின்றன. மொத்த இயக்கங்களும் அணைந்த சோகையான விளக்கொளியில் சோம்பலடைந்த தருணமானது வெகு பதற்றமூட்டுபவையாக இருக்கிறது. ஒளிந்து முன்னேறும் ஏதோ பூனையொன்றின் கண்கள் பளிங்காய் மின்னி பயமூட்டுகிறது. படபடக்கும் மனநிலை ஓரிரு நிமிடங்களில் சரியானாலும் பூனையின் கண்களில் தெரிந்தது குரூரமா? பயமா ? ஒளியா ? குழப்பங்கள் நீளத்துவங்குகின்றன.

பகலில் ஓடிக்களைத்த வாகனங்கள் சாலையின் இருபுறமும் சாம்பல்படிந்தாற் போல் கிடக்கின்றன. உருமிக்களைத்த சப்தங்களற்று. என் மொட்டை மாடியின் செல்பேசி டவர்கள் வான்முட்டும் உயரமாய்த் தெரிகிறது. அதன் மேலேறி குதிக்கிற மனம் என்னவென்றே சொல்ல இயலாத எண்ணங்களை மூட்டி செல்கிறது.

இங்கு நிறைய மழை என்ற கடைசி வார்த்தையுடன் தொடர்பறந்த தொலைப்பேசி மூன்று நாட்களாய் இயங்கவில்லை. எந்த செய்தியும் இல்லை. ஏன் என்கிற கேள்விக்கு உன் பதட்டம் என்னைத்தொல்லைப்படுத்துகிறது என்பாள். உன் அக்கரை என்னை இம்சிக்கிறது என்பாள். வார்த்தைகளின் முடிவில் வெகு இயல்பாய் ஒரு மெல்லிய காகிதத்தின் சுருட்டலாய் வீசி எறிவதை எப்போது நிறுத்துவாள்.

கழுத்தின் மெல்லிய நரம்புகள் புடைக்க அதிர்ந்து நிறுத்துகையில் அதை அறுத்து ரத்தம் குடிக்க சொல்கிற மனநிலை இப்போது உச்சத்தில் இருக்கிறது. இது இரவு, பகலின் வேடிக்கைகள் இற்றுப்போன இரவு,சப்தங்கள் அடங்கிப்போன இரவு. இது இரவு.வெறிக்கொண்ட ஓநாயின் கோரப்பற்கள் விரிந்து வரும் மிருகமாய் வெறிக்கிறது இந்த இரவு. ஒவ்வொரு கணமும் துடிக்கும் மனதின் ஒலி தடதடக்கிறது. மெல்ல பெருகும் சப்தம் நெஞ்சின் வெளியில் துடிக்கிறது. பெருகும் வேர்வை கசகசப்பில் நிலைக்குலைந்த மனம் வானம் வெறிக்கிறது. 


யாருமில்லாத / யாருக்கும் பிடிக்காத ஒருவன் பிடிக்காத இரவில் வானம் வெறிப்பது அச்சமூட்டுவதாகத்தான் இருக்கிறது. சப்தங்கள் இயக்கங்கள் தொலைந்த ஓய்ந்த கணம் அமைதி என்கிற பேரச்சத்தின் பிடியில் கருமிறவின் உறக்கம் தொலைந்தது எங்கே. சிறகடித்த கோடிப்புறாக்கள் எங்கு உறங்கும். அதற்கான கூட்டில் அதற்கான உறவுகளோடு இருக்கலாம். எதன் பொருட்டு அலைந்து திரிகிறவனாக இருக்கிறேன். எதன் பொருட்டு குடும்ப சிக்கல்களுடன் போராடிக்கொண்டிருக்கிறேன். யாரைத் திருப்திபடுத்த எல்லாம் இழப்பவனாக இருக்கிறேன். ஆயிரம் கருமை கரங்கள் வழிந்தோடும் இந்த இரவில் என்னை வெறிக்கும் வானின் கிழிந்த ஒற்றைக்கண்ணை பிய்த்தெரிகிற மனநிலைக்கு என்ன பெயர். இது இரவு உறக்கம் வரவே வராத இரவு. உறக்கத்தை வெறுத்தோடுகிற இரவு.

எப்போதோ வீட்டில் கோபித்துக்கொண்டு படுத்துக்கிடந்த முனீஸ்வரனின் கோயிலின் அரசமரம் ,நடுஇரவில் பேயாய் திகிலூட்டிய அச்சம் மறந்தும் கோப ,பசிமயக்கத்தில் உறங்கத்துவங்க சடசடவென படப்படத்த பறவைகளின் இருள் வெறியில் திடிக்கிட்டு எழுந்து கண் மண் தெரியாமல் ஓடத்துவங்கியது நிழலாடியது. இது இரவு. உறக்கமில்லாத இரவு. இது மற்றொரு இரவு. இனிதே கழிந்தது இனி நாளையும்

பூசிக்கொண்ட தாரின் நிறம்
பொய்த்துப்போன நிலவின் கரம்
பூனையின் கண்களில் மினுங்கும்
அறுபட்ட நேர மின்சாரம்

ஆடும் மரங்கள் ஓய்ந்த
நிலையில்
படப்படக்கிறது
ஒற்றைப்பறவை
இரவின்
கருமைப்பூசி 

--

8 சொல்லிட்டுப்போனவங்க:

  1. பொய்த்துப்போன நிலவின் கரம்
    பூனையின் கண்களில் மினுங்கும்

    அழகு கென்.

    தனிமையும் இருளும் கொண்ட மனம் பார்க்கும் இரவு இது. கொஞ்சம் குழம்பியும் கூட
    .
    தெளிந்த ,உற்சாக மனது இருளை எவ்வாறு உற்று நோக்கும் ?எழுதுங்களேன் .வாசிக்க ஆவலாய் உள்ளது .

    மேகம் மறைத்த நிலவின் முகம் ,
    மின்மினிப்பூச்சிகளாய் நிலம் இறங்கும்

    ReplyDelete
  2. நன்றி கற்றது கைமண் அளவு , பத்மா

    மேகம் மறைத்த நிலவின்
    முகம்
    மின்மினிப்பூச்சுகளாய் நிலம்
    இறங்கும்

    அழகா சொல்லியிருக்கீங்க

    ReplyDelete
  3. ம்ஹ்ம் நல்லாருக்கு பதிவு :))

    ReplyDelete
  4. நன்றி சிட்டுக்குருவி # ஏன் பெருமூச்சு

    ReplyDelete
  5. இன்மையில் இருப்பதற்குரிய சகல காரணிகளும்
    சார்ந்திருக்கும் ஒற்றைப் புள்ளி தொட்டு இரவின் வாதையை யாருமற்ற சூன்யத்தை வார்த்தைகளிட்டு நிரப்பித் தந்திருக்கிறார் கென்

    ReplyDelete
  6. rombanalla irukkunu solrathu kooda kuraichal thala... intha punaivu oru vetridatha nokki izukkuthu.

    ReplyDelete
  7. Nandri nesamithran, Chandru :)

    ReplyDelete