சாயங்காலம் ஏழு மணிக்கு அலுவலகத்திலிருந்து காரில் கிளம்புகையில் மனைவியை அழைத்தேன். இரு முறை முழு ரிங்க் போன பின்னும் போனை எடுக்காததால், சிறு யோசனையுடன் பார்க்கிங்கிலிருந்து கிளம்பினேன். 100 கிமீ வேக லேனில் நுழையத்துவங்குகையில் செல்போன், வொய்ப் காலிங்க் என்று ஒளிரத்துவங்கியது.
மெதுவாய் லேன் மாறி சிக்னலில் நிற்கையில் திரும்ப அழைத்தேன். என்னாச்சுடி என்கையில் இல்ல லேசா உடம்பு வலி அதான் அசந்து தூங்கிட்டேன். போன் அடிச்சது என்னமோ கனவுல கேட்கிற மாதிரி இருந்திச்சு அதான் எடுக்கலை என்றாள்.
எட்டாவது மாதத்தின் இரண்டாவது வாரம் அது, எப்போது வேண்டுமானாலும் பிரசவம் நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லியிருந்தார். ஏதேதோ எண்ணங்கள் அலையடிக்க பின்னால் ஒலித்த ஹாரனின் சப்தத்தில் திடிக்கிட்டேன். கார் லேனில் சிறிது அலையடித்திருந்தது , கையை உயர்த்தி மன்னிப்பு கேட்டபடி 80 கிமீ லேனில் மாற்றிக்கொண்டேன்.
வீட்டிற்குள் நுழைகையில் மெதுவாய் தளர்ந்து நடந்து வருபவளை கண்டவுடனேயே மனம் என்னமோ செய்தது. ஷூக்களை மூலைக்கொன்றாய் வீசி எறிந்து விட்டு சோபாவில் அடித்துப்போட்டாற்போல விழுந்தேன். மெதுவாய் நடந்து வந்து அமர்ந்தவள், சாப்பிடுறீயா என்றாள் நேரம் 8 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. ஏண்டி என்கையில் டயர்டா இருக்கு சீக்கிரம் சாப்பிட்டு படுக்கனும்னு இருக்கு என்றாள்.
மேடிட்ட வயிறும் தளர்ந்த முகமுமாய் இருப்பவளைப்பார்க்கையில் என்னவோ போலிருந்தது. சரிடி சாப்பிடலாம் நான் கை கால் கழுவிட்டு வரேன் என்று பெட்ரூம்க்குள் நுழைந்து பேண்ட் சட்டையை மாற்றிக்கொண்டு வந்தேன்.
முதல் வாய் வைத்ததுமே மூளைக்குள் சுரீரென்றது, என் முக சுளிப்பைப்பார்த்ததுமே என்னடா நல்லாயில்லையா என்றாள். ச்சே ச்சே நல்லாயிருக்கு என்றபடி ஒருவித குற்றவுணர்வுடன் சாப்பிடத்துவங்கினேன்.
தள்ளிய வயிறுடன் ஒரு கை ஊனி அமர்ந்து ,சாப்பிட்ட தட்டுகளை எடுத்துக்கொண்டு போகிறவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்.
படுத்தவுடன் வழக்கம் போல தூங்கிப்போனவன், ஏதோ சப்தம் கேட்டு எழுந்தேன். வழக்கத்திற்கு மாறாய் மூச்சு வேக வேகமாய் விட்டபடி அறைக்குள் நடந்து கொண்டிருந்தாள். மேடிட்ட வயிறு உப்பி உப்பி மூச்சுக்கு ஏத்த மாதிரி சுருங்கி விரிகையில் மனம் படபடக்கத் தொடங்கியது. என்னாச்சுடி டாக்டர்கிட்ட போகலாமா ? மணி இப்போவே 11 ஆகிடுச்சு சொல்லு என்றேன்.
ஹேய் இல்லடா, இது பொய் வலி , லஷ்மி சொன்னாங்கள்ள அந்த கஷாயம் போடு , குடிச்சிட்டு படுக்கிறேன். சாப்பிட்டது ஏதோ ஒத்துக்கலைன்னு நினைக்கிறேன் என்றாள். கேஸ் ஸ்டவ்வில் பாத்திரத்தை வைக்கையிலேயே முனகல் சப்தம் அதிகமாய் கேட்கத்துவங்கியது. எதையோ கருக்கி குடிக்க வைக்க எடுத்துக்கொண்டு வந்தேன்.
டிவி ஹாலின் சோபாவில் ஒரு புறமாய் வளைந்து கிடந்தவளை கண்டவுடன் பயத்துடன் ஓடி வந்தேன். காலில் ஏதோ சில்லிட தரையில் வெண்ணிற சளி போன்றதை கண்டவுடன் என்னாச்சுடி என்றேன் பதட்டத்துடன்.
முனகலுடன் இல்லடா வலிக்குது அதான் என்றவளை பயத்துடன் பார்த்து விட்டு, மெடிக்கல் பைல் மற்றும் பாஸ்போர்ட் காப்பி , ஐடி காப்பி என்று கையில் கிடைத்ததை எல்லாம் அவளின் பையில் வைத்து விட்டு கார் சாவியுடன் ஏறக்குறைய இழுத்துக்கொண்டு லிப்டில் நுழைந்தேன்.
காரின் முன்னிருக்கையில் முனகலுடன் வளைந்து கிடந்தவளை கவலையுடன் பார்த்தவாறு ஹமாத் மருத்துவமனைக்கான வழியில் நுழைந்தேன். நேரம் நள்ளிரவு 12 நெருங்கிக்கொண்டிருந்தாலும் சாலைகளில் பகல் நேர சுறு சுறுப்புடன் வாகனங்கள் நெருக்கியடித்துப் பறந்து கொண்டிருந்தன.பல யோசனைகள் பயமும் பிடித்துத்தள்ள ஒரு வழியாய் பார்க்கிங்கில் காரை விட்டுவிட்டு மெதுவாய் அணைத்துப்பிடித்து இழுத்துக்கொண்டு போய் ரிசப்ஷனில் இருக்க வைத்தேன்.
பிலிப்பைனி நர்ஸ் வந்தவர், என் மனைவியை மட்டும் உள்ளறைக்கு அழைத்து சென்றார் என் கையிலிருந்த டாக்குமெண்ட்களை பிடிங்கிக்கொண்டு..
நேரம் விரைந்து கடக்க வெளி வந்தவர் கையில் என் மனைவியின் தங்க செயினும் , வளையல்களும் ,தோடும் தந்தபடி மனைவியை பிரசவ வார்டுக்கு அழைத்துப்போகிறோம் , பிரசவம் இன்றே நிகழ்ந்திடும் என்றார்.
இது எட்டு மாதம் 2 வது வாரம் இன்னும் 30 நாட்களுக்கு மேல் ஆகும் என்று என் மனைவி சொல்லியிருந்ததால் ஒன்றும் புரியாமல் திகைத்துப்போய் நின்று கொண்டிருந்தேன்.
பிரசவ வார்டுக்குள் ஆண்களுக்கு இங்கே அனுமதியில்லை என்பதால், பார்க்கிங்கின் காருக்குள் வந்து அமர்ந்தேன். கிட்டத்தட்ட மணிக்கொரு முறை ரிசப்ஷனில் சென்று விசாரிப்பதும் , இன்னும் ஆகவில்லை என்ற பதிலுடன் திரும்பி வருவதுமாய் நேரம் விடியற்காலை 5 நெருங்கிக்கொண்டிருந்தது.
பயமும் பதட்டமும் உறக்கம் இல்லாததுமாய் மெல்ல மெல்ல மனம் திடுக்கிடத்துவங்கியது. தமிழ் சினிமாவின் பிரசவ காட்சிகள் மண்டைக்குள் ஓடத்துவங்கியது. ஒரு பெரிய அழுகுரலும் அதைத்தொடர்ந்த குழந்தையின் குரலுமாய் முடியும் பிரசவம் நேரம் கடக்க கடக்க பதட்டத்தை உண்டு பண்ணத்துவங்கியது.
எப்போது கடைசியாய் பிரசவம் என்று மருத்தவமனைக்குப்போயிருந்தேன் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். என் அம்மாவின் பிரசவம், எனக்கு ஏறைக்குறைய 8 வயதோ 9வயதோ , ஊரின் அரசு மருத்துவமனையில் என்னவென்றே தெரியாமல் ஓரமாய் கட்டுப்போடும் இடத்தில் நின்று கொண்டிருந்தேன். என் அம்மா நடக்கவே முடியாமல் அப்பா வருவார்டா இங்கேயே நில்லு , வெளில எங்கேயும் போயிடாத என்று முனகலாய் சொல்லிவிட்டு அந்த புராதன மருத்துவமனையின் பிரசவ அறைகுள் சென்று விட்டாள். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகிவிட்ட நிலையில் வெளியில் வந்த நர்ஸ் என்னிடம் அம்மாவின் புடவையைத் தந்தாள். போய் பம்புல தண்ணி அடிச்சு அலசிட்டு காய வைச்சுடு என்று சொல்லி விட்டு , உங்க அப்பா இன்னும் வரலையா வந்தா என்னை உடனே வந்து பார்க்க சொல்லு என்றபடி போய் விட்டாள்.
மருத்துவமனையின் வாசலுக்கு வந்தவன் , ரத்தம் தோய்ந்த புடவையுடன் நின்றபடி அடிபம்பு எந்த பக்கமிருக்கும் என்று தேடிக்கொண்டிருந்தேன். அடிபம்பைத்தேடி தண்ணி அடிக்க முடியாமல் எக்கி எக்கி முயன்றபடி இருக்கையில் தண்ணி எடுக்க வந்த பாட்டி , என்னடா செய்றே என்றவள் என் கையிலிருந்த புடவையையும் என்னையும் பார்த்தபடி , யார் கூட வந்தே என்றாள். அம்மாவுக்கு பாப்பா என்றபடி அழத்துவங்கினேன். அழாதேப்பா என்றவள், புடவையை வாங்கி தண்ணீரில் நனைத்து ஊற வைத்து விட்டு, தன் வீட்டிலிருந்து துணிசோப்பின் கட்டி ஒன்றை எடுத்து வந்து துவைத்து தந்தாள். எதையும் யோசிக்க முடியாத வயதது , நன்றி என்று கூட எதையும் சொல்லாமல் புடவையை ஏறக்குறைய பிடிங்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடி வந்தேன். அப்பா நின்று கொண்டிருந்தார்.
திடிரென நினைவு சங்கிலி அறுந்தது, மொபைலில்
என்னுடன் வேலைப்பார்க்கும் நண்பனுக்கு அழைத்து அவன் மனைவியை அழைத்து வந்தால் பிரசவ வார்டில் சென்று பார்க்க முடியும் என்றேன்.
அரை மணிக்குப்பின் பிரசவ வார்டிலிருந்து வந்த நண்பனின் மனைவி இன்னும் பிரசவம் ஆகவில்லை என்றும் என் மனைவி அரை மயக்கத்தில் இருப்பதாகவும் , பயப்படாமல் இருக்க சொன்னதாகவும் சொன்னார்.
ஒன்றும் புரியாமல் நின்று கொண்டிருந்தேன். மனம் யோசனை என்பதே இல்லாததாய் ஒரே புள்ளியில் நின்று கொண்டிருப்பதாய் பட்டது. சிறிதும் புலனின்றி உடல் களைத்துக்கிடந்ததாய் பட்டது. மெதுவாய் ஆண்களுக்கான காத்திருக்கும் அறைக்குள் நுழைந்தவன் கண்ணில் பட்ட கழிவறைக்குள் நுழைந்து முகம் கழுவிக்கொண்டேன். கண்ணாடியில் என் முகம் எனக்கே அந்நியமாய் தெரிவதாய்ப்பட்டது.
நேரம் போய்க்கொண்டிருந்ததால் நண்பனையும் அவர் மனைவியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு நின்று கொண்டிருந்தேன்.
இரு அரபி நர்சுகள், கண்ணாடி பெட்டிக்குள் குழந்தையும் , முழுக்க மூடப்பட்ட நிலையில் மனைவியையும் அழைத்துக்கொண்டு வந்தார்கள். ஏதோ சொல்ல வாயெடுத்தேன்.
யூ ஹஸ்பெண்ட் என்று ஏதோ கேட்க அவசரமாக ஆமாம் என்றபடி குழந்தையை கையிலெடுக்கலாமா என்று கேட்டேன். எடுக்கலாம் என்றார்கள்.
கண்ணாடிப்பெட்டிக்குள் இருந்த குழந்தை ரோஜா இதழின் குவியலாய் இருந்தது. கை நடுங்க கையில் எடுத்த நேரத்தில் , அங்கு வந்த மலையாள நர்ஸ் , நிங்கட வொய்பிண்ட பேரு எந்தானு என்றாள்.
குழப்பத்துடன் சாந்தாமணியின் பேரை சொல்ல, அய்யோட இது பாகிஸ்தானிண்ட பாரியாளானு என்று சிரித்தபடி என் கையிலிருந்த குழந்தையை திரும்ப வாங்கிக்கொண்டாள்.
அடுத்த அரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட 4 குழந்தைகள் பிரசவித்து , நார்மல் வார்டுக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு முறையும் அரபி நர்ஸ்கள் தால் தால் ( வா வா) யுவர் பேபி என்று கிண்டலடித்தபடி போனார்கள்.
நேரம் மதியம் 2 ஆனது, குழப்பமும் , பயத்துடனும் ரிசப்ஷனில் கேட்டேன். மனைவியின் பேரைக்கேட்டவர், சிறிது நேர தேடலுக்குப்பின்
உங்களுக்கு பெண்குழந்தை பிறந்திருக்கிறது சரியாக 12.53 மணிக்கு என்றார். எப்போது பார்க்கலாம் என்கையில் இன்னும் 4 மணி நேரம் கழித்து வார்டுக்கு மாற்றுவார்கள் என்று பெட் மற்றும் வார்டின் நம்பர் தந்தார்.
நேரம் மிக மெதுவாக போய்க்கொண்டிருப்பதாக பட்டது. எல்லா காத்திருப்புக்கு பிறகும் வார்டிக்கு கண்ணாடிப்பெட்டியில் குழந்தையையும் , முழுக்க முகம் வரைக்கும் மூடிய நிலையில் மனைவியையும் அழைத்து வந்தார்கள்.
இம் முறை வேகமாக மனைவியின் முகத்தை விலக்கி பார்த்து விட்டு அவள் கை விரல்கள் பிடித்தபடி பெட்டில் அமர்ந்தேன். டேய் குழந்தையை பாருடா என்றவளின் குரல் கேட்ட பின்னே நிலைக்கு வந்து , கண்ணாடி மூடியை கழற்றி வைத்து குழந்தையை ஏந்தினேன்.
உறங்கியபடி இருந்தவள் மெதுவாய் கண் மலர்ந்து என்னை நோக்கினாள். மிக மெதுவாய் மிக மெதுவாய் புற உலகின் தகப்பனாய் நான் பிரசவிக்கத்துவங்கினேன்.